தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்.

Published Date: February 19, 2025

CATEGORY: EVENTS & CONFERENCES

சென்னை: “தமிழ்நாடு ஃபைபர் நெட் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின் ஆதரவுடன் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது” என தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு (அசோசெம்) தென்மண்டலம் சார்பில், ‘எதிர்கால வேலை உச்சி மாநாடு-2025’ சென்னையில் இன்று (பிப்.19) நடைபெற்றது. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசியது: “மக்கள்தொகை அடிப்படையில் இன்று உலகில் 6-ல் ஒருவர் மட்டுமே இந்தியராக இருந்தாலும், அடுத்த 20 ஆண்டுகளில், உலகில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கையில் நான்கில் ஒருவராக இந்தியர் இருப்பார்.

ஃபார்ச்சூன் 500 நிறுவனங்களில் இந்தியர்கள் சுமார் 11 சதவீதம் பேர் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக பதவி வகித்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் இன்னும் அதிகரிக்கும். மேலும், கல்விச் சேர்க்கையில் செய்யப்பட்டுள்ள பெரும் பங்களிப்பு காரணமாக, தமிழகம் அதிக அளவில் பயன்பெறும்.

கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மக்கள் தொகை குறைந்து, பொருளாதார நிலை மேம்பட்டு வருவது, திறமையாளர்களின் இடம் பெயர்வை ஊக்குவிக்கும்.வெளிநாடுகளில் வேலைக்கு போதுமான ஆட்கள் இல்லாத காரணத்தால், பிற நாட்டினர் அங்கு வேலைக்கு செல்ல வழிவகுக்கும். இதனால், இந்தியாவும், தமிழகமும் பயன்பெறும்.

ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் மூலம் நகரங்கள் ஏற்கெனவே நன்கு இணைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு ஃபைபர்நெட் திட்டத்தின் கீழ், மத்திய அரசின் பாரத்நெட் திட்டத்தின் ஆதரவுடன் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், சிறந்த இணைய இணைப்புடன் நிறைய வேலைகள் தொலைதூரத்தில் நடக்கும்,” என்று அமைச்சர் தியாகராஜன் பேசினார்.

இம்மாநாட்டில், அசோசெம் தென்மண்டல மனிதவள குழு தலைவர் அகஸ்டஸ் அசாரியா, எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் சி.முத்தமிழ் செல்வன், அசோசெம் மண்டல இயக்குனர் (தெற்கு) உமா எஸ்.நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Media: Hindu Tamil